விஷமங்களும் தக்க பதில்களும்
Wednesday, December 08, 2004
  இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றதா? இஸ்லாம் அமைதியையும் சாந்தியையும் சமாதானத்தையும் போதிக்கின்ற பின்பற்றுகின்ற மார்க்கமாகும். எனவே இஸ்லாமானது தீவிரவாதத்தை ஆதரிப்பதுமில்லை அவற்றை ஊக்கப்படுத்துவதுமில்லை.

இறைவன் தன் திருமறையிலே கூறுகின்றான்:
(விசுவாசிகளே!) மார்க்க (விஷய)த்தில் உங்களுடன் எதிர்த்துப் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்கள் அத்தகையோருக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்கள்பால் நீங்கள் நீதமாக நடந்து கொள்வதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடுக்கவில்லை: நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்வோரை நேசிக்கின்றான். (அல்குர்ஆன், 60-8).

முஹம்மது (ஸல்) அவர்கள் போரின் போது போர் வீரர்கள், பெண்களையும், குழந்தைகளையும் கொலை செய்வதைத் தடை செய்திருந்தார்கள். நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள், வரம்பு மீறி நடக்காதீர்கள், பிறந்த குழந்தைகளைக் கொல்லாதீர்கள் என்றும் அறிவுரை கூறி இருக்கின்றார்கள். மேலும், முஸ்லிம்களாகிய உங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளவனை நீங்கள் கொலை செய்தீர்களானால், சொர்க்கத்தின் வாடையைக் கூட உங்களால் நுகர்ந்து பார்க்க முடியாது, அந்த சொர்க்கத்தின் சுகந்தமானது நாற்பது ஆண்டுகள் மணம் வீசக் கூடியது என்றும் அறிவுரை கூறியுள்ளார்கள்.
நூற்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா

நெருப்பிலிட்டு ஒருவனுக்கு தண்டனை வழங்குவதையும் முஹம்மது (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். (நூல்: அபூதாவூத் - ஹதீஸ் எண் : 2675).

ஒரு முறை அவர்கள், ஒரு மனிதரைக் கொலை செய்வதை இரண்டாவது வகைப் பெரும்பாவங்களில் முதன்மையானது எனக்கூறி மறுமைக்குப் பின் உள்ள நியாயத் தீர்ப்பு நாளைப் பயந்து கொள்ளுமாறும், அன்றைய தினம் முதல் விசாரணையாக இரண்டு நபர்களுக்கிமடயே இரத்தம் சிந்தியது சம்பந்தப்பட்ட வழக்குகள் தான் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் என்று முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள் : முஸ்லிம் ஹதீஸ் எண் : 1678, மற்றும் ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண் : 6533).

விலங்கினங்களைக் கூட இரக்கமுடன் நடத்துமாறும், அவைகளைச் சித்திரவதை செய்வதினின்றும் தவிர்த்துக் கொள்ளுமாறும், மக்களை முஹம்மது (ஸல்) அவர்கள் ஊக்கப்படுத்தியுள்ளார்கள். ஒரு பெண்மணி ஒரு பூனையைக் கட்டிப்போட்டு உணவேதும் கொடுக்காமல் அந்தப் பூனையைச் சாகடித்த குற்றத்திற்காக அவள் நரகத்தில் போடப்பட்டாள். ஏனெனில் அவள் அந்தப் பூனைக்கு உணவோ, நீரோ எதையும் கொடுக்கவும் இல்லை, தானாகச் சென்று பூமியில் ஊர்ந்து திரியும் பூச்சிகளைக் கூட தன்னுடைய இரையாக தேடிக் கொள்ள அவள் அனுமதிக்கவும் இல்லை, அந்தக் குற்றத்திற்காக அவள் நரகத்தை அடைந்தாள். (நூல்கள் : முஸ்லிம் ஹதீஸ் எண் : 2422, மற்றும் ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண் : 2365).

ஒரு தாகமுள்ள நாய்க்கு ஒருவன் தண்ணீர் அருந்தக் கொடுத்த காரணத்தால், அவன் சொர்க்கத்தை அடைந்தான். அப்பொழுது முஹம்மது (ஸல்) அவர்களது தோழர்கள் கேட்டார்கள், விலங்கினங்களிடம் இரக்கம் காட்டினாலுமா நாம் சொர்க்கத்திற்குச் செல்வோம் எனக் கேட்டார்கள். உயிருள்ளவற்றிலும், மனிதர்களிடத்திலும் இரக்கம் காட்டுவதால், அதற்கான நற்கூலி இருக்கின்றது, என்று முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள் : முஸ்லிம் ஹதீஸ் எண் : 2244, மற்றும் ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண் : 2466).

திருமறைக் குர்ஆன் மற்றும் முஹம்மது (ஸல்) அவர்களின் பொன்மொழிகளின்படியும், நிராயுதபாணிகளானவர்களின் இதயங்களைத் திடுக்கிடச் செய்யும் அளவுக்கு அவர்களைப் பயத்தில் ஆழ்த்துவதும், பொதுமக்களின் குடியிருப்புக்கள், சொத்துக்களை அழிப்பதும், ஒன்றுமே அறியாத பெண்களையும்., குழந்தைகளையும் கண்ணி வெடிகொண்டும், ஏவுகணைகள் கொண்டும் தாக்கி அழிப்பதும் (இத்தகைய நாசகார ஆயுதங்கள் யாவும் இன்று நவீன உத்திகளுடன் ஐரோப்பியர்களாலும், அமெரிக்கர்களாலும், இஸ்ரேலியர்களாலும் தான் கண்டுபிடிக்கப்பட்டு, ஒன்றுமறியா மக்களின் மீது அவற்றை வீசி அவர்களை அழித்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த ஆயுதங்கள் யாவும் முஸ்லிம்களின் கண்டுபிடிப்புகள் அல்ல என்பதையும் குறிப்பிட விரும்புகின்றோம். இவ்வளவு நாசகார ஆயுதங்களை வைத்துக் கொண்டு இன்று முஸ்லிம்களைத் தீவிரவாதிகள் என பொய்ப்பிரச்சாரம் செய்து வருகின்றார்கள் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகும்) இஸ்லாத்தினால் தடை செய்யப்பட்டதாகும்.

முஸ்லிம்கள் யாவரும் அன்பையும், சாந்தியையும், சமாதானத்தையும், கருணையையும், மன்னித்தலையும் கற்றுக் கொடுக்கின்ற ஒரு மதத்தை அல்லது மார்க்கத்தைப் பின்பற்றி வருபவர்கள், இன்று ஒரு சில முஸ்லிம்கள் செய்யும் தவறுகளுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த வித தொடர்பும் கிடையாது.

தனிப்பட்ட வகையில் ஒரு முஸ்லிம் தீவிரவாதத்துடன் தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்வாரேயானால், அவர் இஸ்லாத்தின் பார்வையில், இஸ்லாமியச் சட்டங்களைப் புறந்தள்ளிய குற்றத்திற்கும், அதை மீறிய குற்றத்திற்கும் ஆளான குற்றவாளியாவார்.
 
இஸ்லாம் பற்றிய நிகழ்கால விமர்சனங்களுக்கு தக்க பதில்கள்.

ARCHIVES
December 2004 /


Powered by Blogger

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது